Friday, May 23, 2008

'இங்கே யாருக்கும் வெட்கமில்லை!'








'தமிழக சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு சம்பளத்தை குறைத்துக்கொண்டு படிகளை அதிகரித்து மாதம் 63 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவேண்டும்' என சமீபத்தில் சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதற்கு எதிர்வினையாக இங்கே வெடிக்கிறார் தமிழருவி மணியன்...
காந்தி-இர்வின் ஒப்பந்தம் 1931-ம் ஆண்டு நிறைவேறியது. அந்த ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றபோது இந்தியாவின் வைஸ்ராய் இர்வினும், மகாத்மா காந்தியும் அடிக்கடிசந்தித்துப் பேசவேண்டிய
அவசியம் நேர்ந்தது. அந்தச் சந்திப்புகளின் போது ஒருநாள் மகாத்மாவைத் தன்னோடு மதிய உணவு அருந்தும்படி இர்வின் வேண்டினார். உணவு மேசையில் சேவகி மீராபென் உடன் கொண்டுவந்த பேரீச்சம் பழங்களையும், ஆட்டுப் பாலையும் எடுத்து வைத்து மகாத்மா உண்ணத் தொடங்கினார். வியப்பால் விழிகள் விரிய, 'இது என்ன உணவு?' என்றார் இர்வின். 'இதுதான் முஹம்மது நபிகளார் உண்ட உணவு' என்று சிரித்தபடி உரைத்தார் அண்ணல். காந்தியின் அரை ஆடையும், குறைந்த உணவும், எளிய வாழ்க்கை முறையும் இர்வின் இதயத்தை நெகிழச் செய்தது நேற்றைய சரித்திரம்.
வைஸ்ராய் இர்வினிடம் மகாத்மா, 'உங்கள் மாதச் சம்பளம் எவ்வளவு?' என்று பேச்சினிடையே கேட்டபோது, 'ரூபாய் 21 ஆயிரம்' என்றார். 'ஒரு நாளின் சராசரி வருமானம் இரண்டு ரூபாய் உள்ள இங்கிலாந்து மக்களின் பிரதமருக்கு மாதச் சம்பளம் ரூபாய் 5400. ஆனால், வெறும் இரண்டணாவை சராசரி வருமானமாகப் பெறும் இந்தியர்களின் வைஸ்ராய் ரூபாய் 21 ஆயிரம் மாதச் சம்பளமாகப் பெறுவது அதர்மம் இல்லையா?' என்று மனம் வருந்திக் கேட்டார் மகாத்மா.
இன்று இந்திய மக்களில் 77 சதவிகித மக்கள் ஒரு நாளின் சராசரி வருமானமாக 20 ரூபாய் பெற்று, இரவு உணவின்றி, ஈரத் துணியை வயிற்றில் சுற்றியபடி, கிழிந்த பாயில், ஒழுகும் கூரைக்கு அடியில், விழிநீருடன் வாழும் நிலையில்... நம் ஞானசேகரனைப் போன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ரூபாய் 63 ஆயிரம் படியாகத் தரும்படி அரசிடம் கேட்பது அநியாயம் இல்லையா?
கேட்பவர் யார்..? காந்தி வழி வந்த காங்கிரஸ்காரர்(!). 'வாழ்க நீ எம்மான்' என்று ஆண்டுக்கு இருமுறை காந்தி பிறந்த நாளிலும், மறைந்த நாளிலும் மட்டும் இரண்டு நிமிடங்கள் வாய் திறந்து 'அஞ்சலி' செலுத்தும் பொய்மைவாதிகளின் பாசறையாகக் காங்கிரஸ் பாழ்பட்டுப் போனதைப் பார்த்து விண்ணிலிருந்தபடி கண் கலங்குகிறார் காந்தி.
'இந்தியாவில் 77 சதவிகித மக்களின் ஒரு நாள் சராசரி ஊதியம் அரை டாலருக்கும் குறைவு. இந்தியக் குழந்தைகளில் 80 சதவிகிதம் ஊட்டசத்தின்றி இரத்த சோகையில் வாடுகின்றன. 38 சதவிகித இந்தியர்களுக்கு மூன்று வேளை உணவு கிடைக்கவில்லை. இந்திய மக்களில் சரிபாதியினருக்குச் சுத்தமான குடிநீரும், கழிப்பிட வசதியும் இன்றுவரை சேரவில்லை' என்று நம் குடியரசுத் துணைத் தலைவர் புதுடெல்லியில் 'விஷன் - 2025' கருத்தரங்கில் நம் பரிதாபத்துக்குரிய ஏழ்மையை உலகறிய பட்டியலிட்டிருக்கிறார். உலக நாடுகளின் நிலையை ஆய்வு செய்து 'யூனிசெப்' தந்திருக்கும் அறிக்கையில் 'போதிய உணவின்றி வாடும் குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம்' என்று குறிப்பிட்டிருக்கிறது.
இந்த விவரங்கள் எல்லாம் நமக்கெதற்கு? தமிழக சட்டமன்ற நடவடிக்கைகளின் நிறைவு நாளில் ஞானசேகரன் தரும் விவரங்களைப் பார்ப்போம் -
'மகாராஷ்டிரத்தில் சம்பளத்துடன் படிகளும் சேர்த்து ரூ.65 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஆந்திரப் பிரதேசத்தில் ரூ.43 ஆயிரம், இமாச்சலப் பிரதேசத்தில் ரூ.33 ஆயிரம், அரியானாவில் ரூ.31,500 என்று வழங்கப்படுகிறது. தமிழகத்தில் எம்.எல்.ஏ-க்களின் சம்பளம் ரூ.2 ஆயிரம். இந்த சம்பளத்தைக் குறைத்துக்கொண்டு படிகளை உயர்த்தி ரூ.63 ஆயிரம் வழங்கலாம். 385 பஞ்சாயத்து யூனியன் தலைவர்களுக்கு கார் தரப்படுகிறது. எம்.எல்.ஏ. என்றால் மரபுப்படி தலைமைச் செயலருக்கு இணை என்று சொல்லப்படுகிறது. எனவே, அதற்கேற்ப வசதிகள் செய்து தர வேண்டும். ஒவ்வொருவருக்கும் கம்ப்யூட்டர் தரப்படுகிறது. அதை இயக்க ஆபரேட்டர்களைத் தரவேண்டும்' என்று ஏழை எம்.எல்.ஏ-க்களின் வாழ்கைத் தரம் உயர்வதற்கு மிகுந்த சமூகப் பொறுப்புடனும், தார்மிக ஆவேசத்துடனும் அரிய பரிந்துரைகளை அரசுக்கு அள்ளி வழங்கியிருக்கிறார் 'ஏழைப் பங்காளர், காமராஜரின் எளிய தொண்டர்' ஞானசேகரன்.
சென்ற சட்டமன்றத் தொடரில் இவர்தான் சென்னைப் புறநகரில் எம்.எல்.ஏ-க்களுக்குத் தனித்தனியாக நிலம் ஒதுக்கி 'எம்.எல்.ஏ காலனி' அமைக்கவேண்டும் என்று குரல் கொடுத்தவர். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை எம்.எல்.ஏ-க்களுக்கு காலனி அமைத்து, ஒட்டுமொத்த தமிழகத்தையே சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பட்டா போட்டுக் கொடுத்துவிட்டு, ஓட்டுப் போட்டவர்கள் வங்கக் கடலில் இடம் தேடிக் கொள்ளலாம். சட்டமன்ற உறுப்பினர்களின் வாழ்க்கை வசதிக்காக நாம் எந்தத் தியாகம் செய்தாலும் தகும். நம் பிறவிப் பயனை அடைவதற்கு இதைவிட்டால் வேறு வழி இல்லை!
தமிழக அரசு சட்டமன்ற உறுப்பி னர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம், ரூ.12 கோடி செலவில் வாகனங்களும் வழங்குவதாக அறிவித்துள்ளது. பஞ்சாயத்து யூனியன் தலைவருக்கு மதிப்பூதியமாக மாதம் ரூ.500 மட்டுமே வழங்கப்படுகிறது. அமர்வுப் படியாக ரூ.100 தரப்படுகிறது. மக்களுடன் நேரடியாகவும், நெருக்கமாகவும் தொடர்பு கொண்டுள்ள யூனியன் தலைவர்களுக்கு மிகக் குறைந்த மதிப்பூதியம் வழங்கப்படும் நிலையில், அவர்களுக்கு அரசு வாகனம் வழங்குவதில் நியாயம் இருக்கிறது. முப்பதாயிரம் மாதந்தோறும் பெறும் எம்.எல்.ஏ-க்களுக்கு வாகனம் வாங்க, அரசு வட்டி இல்லாத கடன் கொடுத்தால் மாதம் ரூ.5000 வீதம் ஐந்தாண்டுகளில் கடனை அடைத்து வாகனத்தையே சொந்தமாக்கிக் கொள்ளலாமே! வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள வழி தேடும் ஞானசேகரன்கள், காந்தி அறிவுறுத்திய வாழ்வியல் தரத்தை ஏன் நினைவில் நிறுத்தவில்லை? 'உண்மையான நாகரிகம் விருப்பங்களைப் பெருக்குவதில் இல்லை. நாமே விரும்பி முயன்று விருப்பங்களைக் குறைப்பதில்தான் இருக்கிறது' என்று காந்தி சொன்னதைக் கதர்ச்சட்டைக்காரர்களே காது கொடுத்துக் கேட்காதபோது, மற்றவர்களைப் பற்றிச் சொல்லி என்ன ஆகப்போகிறது?
இந்திய அரசியலமைப்பில் எம்.பி-க்களும், எம்.எல்.ஏ-க்களும் உயர் சலுகைகளை அனுபவிக்கும் தனி வர்க்கமாக மாறிவிட்டனர். ஏழை, பணக்காரன் என்ற இரு வர்க்கங்களைச் சிந்தித்த கார்ல் மார்க்ஸ், கனவிலும் சிந்திக்காத புதிய வர்க்கம் இவர்கள்! சமூகம் புரையோடிப் போனதற்கு முதற்காரணியே இந்தப் புதிய வர்க்கம்தான். இந்தப் போலி நலன்களுக்குத் தேர்தல் சுயம்வரத்தில் மாலை சூட்டுவதுதான் வாக்களிக்கும் குருட்டு தமயந்திகளின் வாழ்க்கையாகிவிட்டது. இருள் கவிந்து கிடக்கும் இந்திய அரசியலில் ஆறுதல் அளிக்கும் வெளிச்சக் கீற்றுகளாக இருப்பவர்கள் இடதுசாரி இயக்கத்தவர்கள். தேர்தல் களத்தில் வேட்பாளர்களின் செலவை இந்த இயக்கங்கள் ஏற்கின்றன. வெற்றி பெற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு வழங்கும் ஊதியம், படி அனைத்தையும் அந்த இயக்கங்களிடமே ஒப்படைக்கின்றனர். அவர்களுடைய வாழ்க்கைச் செலவுக்கு வேண்டியதை மட்டும் தங்கள் இயக்கங்களிடம் இருந்து பெற்றுக்கொள்கின்றனர். இந்த முறையை அனைத்துக் கட்சிகளும் ஏன் ஏற்கலாகாது?











சமூகத்திற்குச் சேவை செய்யும் நோக்குடன் தங்கள் சொந்த சுகங்களைத் தியாகம் செய்யத் துணிந்தவர்களே பொது வாழ்க்கைக்கு வரவேண்டும். தன்னையே எப்போதும் முன்னிலைப்படுத்தி, சொந்தத் தேவைகளுக்கே எப்போதும் கூச்சமற்றுக் குரல் கொடுக்கும் மனிதர்கள் சட்டமன்றத்துக்கு வராவிட்டால் சமூகத்துக்கு என்ன நட்டம்?' 'hy should one live, if one can not live honourably' என்றார் மகாத்மா. தேவைகளின் பெருக்கத்திற்காக சுதர்மத்தையும், சுயகௌரவத்தையும் காற்றில் பறக்கவிடும் சாதாரண மனிதர்களாக மக்களின் விதியெழுதும் சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள் சரிந்து போகலாமா? அதிலும்... காந்தி, காமராஜ் பெயரை உச்சரிக்கும் காங்கிரஸ்காரர்களுக்குக் கூடுதல் பொறுப்பில்லையா? 'பத்து வேட்டி சட்டையை மட்டும் சொந்த சொத்தாக விட்டுவிட்டுச் செத்தார் காமராஜர்' என்ற நிதர்சனத்தைக் காட்டி, நீலிக்கண்ணீர் வடிப்பவர்களின் 'காமராஜ் ஆட்சி' வந்தால் அது எந்த லட்சணத்தில் இருக்கும் என்ற சந்தேகம் மக்களுக்கு வராதா?
'வெறுப்புக்கு மாற்றாக அன்பு, போட்டிக்குப் பதிலாக ஒத்துழைப்பு, தன்னலத்துக்கு மாறாகத் தியாகம், புற ஆரவாரத்துக்குப் பதிலாக அக நாகரிகம்' என்பதுதானே காந்தியம்! 'இந்தியா கிராமங்களில் வாழ்கிறது, கிராமங்களின் வறுமையைப் போக்கும் நாளே உண்மையான சுயராஜ்யம் அடைந்த நாள்' என்பதுதானே காந்தியப் பிரகடனம்!
மகாத்மா தன்னுடைய அந்திம நாட்களில் காங்கிரஸை கலைத்துவிட்டு ஏழு லட்சம் கிராமங் களிலும் நிர்மாணத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு 'லோக் சேவக்' சங்கம் அமைக்க விரும்பினார். 'இன்றைய காங்கிரஸ் மூலம் நம் சமூகக் கட்டமைப்புக்கான கனவுகளை நிறைவேற்ற முடியாது என்ற உண்மையை நாம் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்' என்று அன்றே பகிரங்கமாக அறிவித்தார். நம் ஞானசேகரன்கள் காந்தியத்தைக் கடைப்பிடிக்க மறந்தாலும், காந்தி சொன்னதை நிச்சயம் நிறைவேற்றுவார்கள்!
உலகில் ஏழைகளும், கல்வியறிவற்றவர்களும், இந்தியாவில்தான் அதிகமாக இருக்கிறார்கள். ஊழல் செய்து காசு பார்ப்பதில் உலகின் முதல் 10 நாடுகளில் நம் நாடும் ஒன்று. இதில் இங்கே யாருக்கும் வெட்கமில்லை. அப்துல் ரகுமான் கவிதை வரிகள்தான் நினைவில் நிழலாடுகிறது -
'இயேசு உயிர்த்தெழுந்தாரோ இல்லையோ
யூதாஸ் உயிர்த்தெழுந்துவிட்டான்.



ஒவ்வொரு ஏசுவின் வருகைக்காகவும் அவன் ஆவலோடு காத்திருக்கிறான்!
ஏனெனில், அவன் விற்பதற்கு இயேசுவின் இரத்தம் வேண்டும்.

No comments: