இந்த வார ஜு.வி யில்
கண்துடைப்பு கமிஷன்கள்!
''எங்களுக்கு நீதி வேண்டும்! என்ன நடந்தது என்ற உண்மை தெரியவேண்டும்?'' என்று எதிர்க்கட்சிகள் தொண்டை நரம்பு புடைக்க குரல் கொடுப்பதும், ஆளுங்கட்சி கூலாக, ''நீதி விசாரணைக்கு உத்தரவிடுகிறோம்'' என்று சொல்லி துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு நடப்பதும் இந்தியத் திருநாட்டில் இன்று நேற்றா பார்க்கிறோம்!
இப்படி எத்தனை கமிஷன்களின் முடிவுகள் முழுசாக நாட்டுக்குத் தெரிவிக்கப்பட்டன? அப்படி பரிந்துரை என்று கமிஷன்கள் ஏதாவது செய்தாலும் எந்தளவுக்கு அது அமல்படுத்தப்பட்டது? அட, எத்தனை கமிஷன்கள் என்ன ஆனது என்ற விவரம் யாரிடம் தான் இருக்கிறது?
குறிப்பாக தமிழக நிலவரத்தை ஃபோகஸ் பண்ணி பொறுமையாக விசாரித்ததில் கிடைத்த விவரங்களைச் சொல்கிறோம்... நெஞ்சைக் கல்லாக்கிக் கொள்ளுங்கள் வாசகர்களே..! செமத்தியாக வெம்பிப் போவீர்கள்!
கமிஷன்கள் இதுவரை... தலையெழுத்து என்ன?
'விசாரணை கமிஷன்கள் சட்டம்' 1952-ம் ஆண்டு இயற்றப்பட்டது. இதன் அடிப்படையிலேயே அரசாங்கங்கள் விசாரணை கமிஷன்களை நியமிக்கின்றன.
இவற்றுக்கான ஆய்வு வரம்பு களும் அரசால் தீர்மானிக்கப்படுகிறது. இந்த கமிஷன்களின் வேலை என்ன? 'நடந்த சம்பவத்துக்குக் காரணங்கள் எவை, எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க என்ன செய்யவேண்டும்' என்பவற்றை அரசுக்கு பரிந்துரைப்பதுதான் விசாரணை கமிஷனின் தலையாயப் பணி. அந்தப் பணிகள் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கப்பட்டு அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படுகிறது. அந்த அறிக்கை பிறகு சட்டசபைகளில் தாக்கல் செய்யப்படும் போதுதான் அதில் உள்ளவை பொதுமக்களுக்குத் தெரியவரும். அந்த அறிக்கையிலேயே அரசு எடுத்த நடவடிக்கை பற்றிய குறிப்புகளும் இறுதிப் பகுதியில் இடம்பெற்றிருக்கும்.
விசாரணை கமிஷன்கள் விஷயம் அரசின் பொதுத்துறையின் கீழ்தான் வருகிறது. தமிழக பொதுத்துறை அதிகாரிகளிடம் பேசினோம்.
நள்ளிரவு கைது...
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 10-க்கும் மேற்பட்ட விசா ரணை கமிஷன்கள் அமைக்கப்பட்டன. மேம்பாலங்கள் கட்டியதில் ஊழல் என்று தற்போதைய முதல்வர் கருணா நிதியை நள்ளிரவில் கைது செய்தது முந்தைய அ.தி.மு.க. அரசு. 'அரசு அதிகாரிகள் கடமையைச் செய்ய விடாமல் போலீஸாரைத் தடுத்தார்கள்' என்று அப்போது மத்திய அமைச் சர்களாக இருந்த முரசொலி மாறனும் டி.ஆர்.பாலுவும் கைது செய்யப்பட்டார்கள். இந்தக் கைது விஷயத்தில் போலீஸ் முறைகேடுகள்(?) பற்றி விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ராமன் தலைமையில் கமிஷன் அமைத்தார் அன்றைய முதல்வர் ஜெயலலிதா. இந்த கமிஷனை தி.மு.க. புறக்கணித்துவிட்டது. கடைசிவரை இந்த கமிஷனின் அறிக்கை வெளிவரவில்லை. காரணம், தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்து ராமன் கமிஷனைக் கலைத்துவிட்டதுதான்.
வெங்கடேசப் பண்ணையார் என்கவுன்ட்டர்...
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் வெங்கடேசப் பண்ணையார் போலீஸ் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதை விசாரிக்க நீதிபதி ராமன் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. சில வாரங்களிலேயே ராமனின் மருமகன் வெங்கடேசன் ஸ்ரீரங்கத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். உடனே, கமிஷனுக்குத் தடை விதிக்கவேண்டும் என்று சிலர் கோர்ட்டில் தடை வாங்கினார்கள். பிறகு தடை நீக்கப்பட்டது. ஆனாலும், பண்ணையார் மரணம் குறித்து கமிஷன் என்னதான் கண்டறிந்தது என்ற அறிக்கை இன்றுவரை வெளிவரவில்லை.
வெள்ள நிவாரண நெரிசல் மரணங்கள்...
''2005-ம் ஆண்டு இறுதியில் வெள்ள நிவாரணம் வழங்கு வதில் ஏற்பட்ட நெரிசலில் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் 42 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கும் ராமன் தலைமை யில் கமிஷன் அமைக்கப்பட்டது. அதுதொடர்பான விசாரணை நடந்து கொண்டிருக்கிறது'' என்றும் சொன்ன பொதுத்துறை அதிகாரிகள் மேலும் சில கமிஷன்கள் பற்றி தந்த விவரங்கள் -
நீயா... நானா!
''முந்தைய தி.மு.க. ஆட்சியின்போது சென்னையில் பத்து இடங்களில் பாலங்கள் கட்டப் பட்டன. அதில் பெரம்பூரில் மேம்பாலம் கட்டும் பணி இடையிலேயே நின்று போனது. அடுத்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, 'பெரம்பூர் பாலம் கட்டு வதில் ஊழல் நடந்திருக்கிறது' என்று சொல்லி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகம் தலைமையில் 2001-ம் ஆண்டு கமிஷன் போட்டார். அவர் அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்தும், அ.தி.மு.க. ஆட்சி முடியும்வரை அந்த அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வெளிவரவே இல்லை.
தற்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு சிறுதாவூர் நிலம், கடலூர் குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் ராமலிங்கம் என்பவர் மர்மமாக இறந்தது, ஓமலூர் பாத்திமா பள்ளி மாணவி சுகன்யா மரணம், லேட்டஸ்டாக டெலிபோன் ஒட்டுக்கேட்பு என்று விசாரணை கமிஷன் களைப் போட்டிருக்கிறது.
ஜெயலலிதா ஓய்வு எடுப்பதற்காக அடிக்கடி போய் தங்கும் சிறுதாவூர் பங்களா அமைந்திருக்கும் இடம், அண்ணா ஆட்சிக்காலத்தில் தலித்களுக்கு வழங்கப் பட்ட பஞ்சமி நிலம் என்று கம்யூனிஸ்ட்கள் போராட்டம் நடத்தினார்கள். இதற்காக நீதிபதி கே.பி.சிவசுப்பிரமணியன் தலைமையில் விசாரணை கமிஷனை நியமித்தது தி.மு.க. அரசு. ஆட்சிக்கு வந்ததுமே 2006 ஜூலை 27-ம் தேதி அமைக்கப்பட்ட இந்த கமிஷனின் அறிக்கை இன்னும் தாக்கல் ஆகவில்லை. காரணம், கமிஷனை எதிர்த்து சசிகலா தரப்பு ஹைகோர்ட்டில் வழக்கு போட்டது தான். 'விசாரணை கமிஷன் அமைத்தது செல்லும்' என்று சென்னை ஹைகோர்ட் சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்புக் கூறியது. இன்னும் அந்த விசாரணை கமிஷனின் பணிகள் முடிவடையவில்லை'' என்று முடித்தார்கள்.
விசாரணை கமிஷன்கள் தேவைதான்!
அப்புறம் விசாரணை கமிஷன்கள்தான் எதற்கு? 'கருத்துரிமைக்கான மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு அமைப்பாளரும்' சிந்தனையாளருமான பேராசிரியர் அ.மார்க்ஸின் கருத்து இதுதான். ''நேர்மையான நீதிபதிகளைக்கொண்டு விசாரணை கமிஷன்கள் அமைக்கப்பட்டு நல்ல அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டதும் உண்டு. இதற்கு உதாரணம் மும்பையில் நடந்த கலவரம் தொடர்பாக விசாரிக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணா அறிக்கை. நேர்மையான விசாரணை கமிஷன்கள் மூலம் வெளிப்படும் உண்மைகளை மக்களிடம் கொண்டு செல்ல மனித உரிமை அமைப்புகள் போராடிக் கொண்டு இருக்கின்றன.
போலி மோதல் கொலைகள் (என்கவுன்ட்டர்) தொடர்பாகக் கடந்த ஆண்டுஆகஸ்ட் மாதம் தலைமைச் செயலாளர் திரிபாதி - டி.ஜி.பி-க்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். 'இனி என்கவுன்ட்டர்கள் நடந்தால் அதன் மீது ஆர்.டி.ஓ. விசாரணை கூடாது. நீதிபதியை வைத்து விசாரணை கமிஷன்கள் அமைக்க வேண்டும்' என்று அதில் குறிப்பிட்டிருந்தார். அதன்பிறகு நான்கு போலி மோதல் கொலைகள் நடந்திருக்கின்றன. ஆனால், எதற்கும் கமிஷன் அமைக்கப்படவில்லை'' என்கிறார் அ.மார்க்ஸ்.
அரசியல் பார்வைகள்..!
'விசாரணை கமிஷன் அமைப்பதில் விசேஷம் ஏதுமில்லை. வழக்கமான நடைமுறைதான். இதனால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை' - எம்.ஜி.ஆர் நகரில் வெள்ள நிவாரண நெரிசலில் 42 பேர் பலியாகி நீதிபதி ராமன் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்ட போது டிசம்பர் 19, 2005-ம் ஆண்டு கருணாநிதி சொன்னது இது.
அதேபோல், நள்ளிரவில் தான் கைது செய்யப்பட்ட போது நடந்த அத்துமீறல்கள் பற்றி விசாரிக்க அ.தி.மு.க. அரசு ராமன் கமிஷனை அமைத்தபோது, 'இந்த கமிஷன் விசாரணையை ஏற்க முடியாது. எப்படி விசாரிக்க வேண்டும், எந்த மாதிரி விசாரணை அறிக்கையை தயார்செய்து தரவேண்டும் என்று அவருக்கு ஜெயலலிதா அரசு ஏற்கெனவே கூறிவிட்டது. இதில் நீதிபதியைக் குறைகூற முடியாது. இதனால் இந்த நீதி விசாரணையை ஏற்க முடியாது' என்று 2001 ஜூலை 7-ம் தேதி சொன்னார் கருணாநிதி.
இதற்கு பதிலடியாக ஜெயலலிதா, 'விசாரணை கமிஷன்கள் அமைக்கப் படுவது புதிதல்ல. இதற்குமுன்பு அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஆட்சியில் கமிஷன்கள் அமைக்கப்பட்டி ருக்கிறது. உண்மையில் தவறு செய்தவர்கள் யார் என்று அறியவே கமிஷன்கள் உதவும். விசாரணை கமிஷனைப் புறக் கணிக்கப்போவதாக கருணாநிதி சொல்லியிருப்பது கண்டிக்கத்தக்கது. நீதித்துறையையே அவமதிப்பதாகும்'' என்றார்.
இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதும் சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக அமைக்கப்பட்ட நானாவதி கமிஷன் அறிக்கை 2005-ல் தாக்கல் செய்யப்பட்ட நேரத்தில், 'எந்த கமிஷன் அறிக்கையென்றாலும் விருப்பு வெறுப்பின்றி நடவடிக்கை மேற்கொள்ள ஆளும் தரப்பினரும் அதே போல அதற்கு ஒத்துழைக்க எதிர்த்தரப்பினரும் முன்வராவிடில் அதனால் எந்த பயனும் ஏற்படாது. நானாவதி கமிஷன் அறிக்கை ஒரு பரிந்துரைதானே தவிர அதுவே தண்டனையை அறிவிக்கும் தீர்ப்பாகாது. அதை பூர்வாங்க ஆதாரமாகக்கொண்டு மேலும் விசாரணை நடத்திதான் முடிவெடுக்க வேண்டும்' என்றார் கருணாநிதி. அவர் இப்படி சாமர்த்தியமாக பேசக் காரணம், அப்போது மத்திய அரசில் தி.மு.க அங்கம் வகித்து வந்தது!
ஜெயலலிதாவின் முரண்பாடுகளும் அப்படியே..! சிறுதாவூர் நிலம் தொடர்பாக தி.மு.க. அரசு கமிஷன் அமைத்தபோது எதிர்ப்புத் தெரிவித்த அதே ஜெயலலிதா, மதுரையில் நாகேஷ் என்பவரின் வீட்டுக்குள் நர்ஸாகப் போனவர் மர்மமாக தூக்கு மாட்டி இறந்துகிடந்த விவகாரத்தில் விசாரணை கமிஷன் வைக்க வேண்டும் என்றார்.
விசாரணை கமிஷனின் அதிகாரம் இவ்வளவுதானா!
விசாரணை கமிஷன்களின் உண்மையான அதிகாரம் என்ன? இதுபற்றி பழைய வரலாறு ஒன்றை நினைவு கூர்கிறார் வழக்கறிஞர் சிராஜுதீன். ''15 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சியில் எம்.எல்.ஏ-வாக இருந்த ராகவன் பிறகு தனிக் கட்சி ஆரம்பித்தார். கண்ணனூர் தொகுதி எம்.எல்.ஏ--வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர், கூட் டுறவுத் துறை அமைச்சராகவும் ஆனார். அதனைத் தொடர்ந்து சொந்தத் தொகுதிக்குப் போன நேரத்தில் அவர்மீது வெடிகுண்டு வீசினார்கள். இதனால் அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் மாலை நேர வங்கிகளைத் திறப்பதற்காக சொந்தத் தொகுதிக்குப் போனார். அப்போது அவரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி பெரும் கலாட்டாவில் ஈடுபட்டார்கள் உள்ளூர்க்காரர்கள். இந்த கலாட்டாவிலிருந்து ராகவனை பாதுகாப்பதற்காக போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் ஐந்து பேர் இறந்தனர். இந்த சம்பவம் 93-ம் ஆண்டு நடந்தது. இதனை விசாரிக்க மாவட்ட நீதிபதி பத்மநாப நாயர் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது.
'சம்பவத்தின்போது முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யதிருக்கவில்லை' என்று கண்ணனூர் துணை கலெக்டர் ஆண்டனி மற்றும் போலீஸ் மீதும் விசாரணை அறிக்கையில் குற்றம்சாட்டியிருந்தார் பத்மநாப நாயர். கமிஷன் அமைக்கப்பட்ட நேரத்தில் காங்கிரஸ் தலைமை யிலான அரசு இருந்தது. ரிப்போர்ட் தாக்கல் செய்யப்பட்டபோது கம்யூனிஸ்ட் தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்தது. விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது
எஃப்.ஐ.ஆர். போடச் சொல்லி டி.ஜி.பி-க்கு உத்தரவிட்டது அரசு. உடனே, துணை கலெக்டர் ஆண்டனியும் குற்றம்சாட்டப்பட்ட போலீஸாரும் இதை எதிர்த்து கேரளா உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட் டார்கள். வழக்கு தள்ளுபடி ஆனது. ஆண்டனி உச்ச நீதிமன்றத்துக்குப் போனார். இந்த வழக்கில் விசாரணை கமிஷன்கள் குறித்த முக்கியமான தீர்ப்பை 2001-ம் ஆண்டு சொன்னது உச்ச நீதிமன்றம். 'என்ன நடந்தது என்று அரசுக்கும் காவல்துறைக்கும் தகவலைத் தெரிந்துகொள்ள விசாரணை கமிஷனின் அறிக்கைகளும் கண்டுபிடிப்புகளும் பயன்படுமே தவிர, இந்த அறிக்கையை நீதிமன்ற விசாரணைக்கு ஒரு ஆவணமாகவோ சாட்சியாகவோ ஒரு நபரின் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டை நிரூபிக்கத் தடயமாகவோ பயன்படுத்த முடியாது' என்று நீதிபதிகள் எஸ்.எஸ்.எம்.காதிரி, எஸ்.என்.புக்கன் ஆகியோர் தீர்ப்பளித்தார்கள்.
விசாரணை கமிஷன் அறிக்கைக்கு எவ்வளவு மதிப்பு இருக்கிறது என்பது புரிகிறதல்லவா?'' என்றார் சிராஜுதீன்.
ஆக, விசாரணை கமிஷனின் அறிக்கையை பரிந்துரையாக மட்டுமே பார்க்கவேண்டும், ஆவணமாக பார்க்க முடியாது என்று புரிகிறது. கமிஷன் அமைப்பதால் செலவு எவ்வளவு?
இதற்கான நீதிபதியின் சம்பளம், மருத்துவப்படி, வீட்டுவாடகைப்படி, பயணச்செலவு, சுற்றுப்பயண படிகள், தொலைபேசிக் கட்டணம், கமிஷனுக்கான அரசு வழக்கறிஞர் களின் ஊதியம், ஊழியர்களின் சம்பளம் என செலவினங்கள் நீள்கின்றன.
உதாரணத்துக்கு சில விசாரணை கமிஷன்களின் செலவைப் பார்ப்போம் (ரூபாயில்).
தலித்களின் பஞ்சமி நிலங்களை வளைத்து ஜெயலலிதா சிறுதாவூரில் பங்களா கட்டினாரா என்பதை விசாரிக்க சிவசுப்ரமணியன் கமிஷன் அமைக்கப்பட்டது.
இதன் செலவு...
2006-07-ம் ஆண்டில் 18 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய்.
2007-08-ம் ஆண்டில் 40 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்.
2008-09 நடப்பு ஆண்டில் 43 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் பள்ளி தீவிபத்து பற்றி விசாரிக்க அமைக் கப்பட்ட சம்பத் விசாரணை கமிஷன் செலவு:
2005-06-ம் ஆண்டில் 10 லட்சத்து 64 ஆயிரம்.
2006-07-ம் ஆண்டில் 46 ஆயிரம்.
சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் வெள்ள நிவாரணம் வாங்கும் போது நெரிசல் ஏற்பட்டு பலர் இறந்த சம்பவத்தை ஒட்டி அமைக்கப்பட்ட ராமன் கமிஷன் செலவு விவரம்:
2006-07-ம் ஆண்டில் 2 லட்சத்து 92 ஆயிரம்.
2007-08-ம் ஆண்டில் 1 லட்சத்து 49 ஆயிரம்.
கடலூர் குள்ளஞ்சாவடி போலீஸ் ஸ்டேஷன் லாக்-அப் மரணம் குறித்து விசாரிக்கப்பட்ட ஜனார்த்தனம் கமிஷனின் செலவு:
2006-07-ம் ஆண்டில் 17 லட்சத்து 3 ஆயிரம்.
2007-08-ம் ஆண்டில் 7 லட்சத்து 47 ஆயிரம்.
2008-09 நடப்பு ஆண்டில் 3 லட்சத்து 86 ஆயிரம்.
'ஆக, இப்படி லட்சங்களை விழுங்கி செயல்படும் கமிஷன்களால் ஒருபயனும் விளைவதில்லை என்கிற போது, வீணாக ஏன் மக்கள் வரிப் பணத்தை வாரி இறைக்கிறார்கள்?' என்ற கேள்வி எழுகிறது!
'அதுக்கென்ன... இதையும் ஒரு விசாரணை கமிஷன் வச்சு கண்டுபிடிச்சுட்டாப் போச்சு!' என்கிறீர்களா? ரொம்பக் குசும்புதான் உங்களுக்கு!
பரிந்துரைகள் என்ன ஆனது?
கும்பகோணம் தீ விபத்து பற்றி விசாரித்த நீதிபதி சம்பத் கமிஷன் விபத்துக்குக் காரணமென 24 பேரை அடையாளம் காட்டியது. இதில் 12 பேர் மட்டும் குற்றவாளி கூண்டில் உள்ளனர். சத்துணவு சமையல் ஆளுக்கு உதவி செய்த ஒருவர், சுகாதார அதிகாரி, சுகாதார ஆய்வாளர், மாவட்ட கல்வி அதிகாரி, முன்னாள் பள்ளிக் கல்வி இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற சி.பழனிவேலு உட்பட 12 பேர் மீது அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்தது என்று கேள்வி எழுப்பப்படுகிறது.
மதுரை மேலூர் அரசு கலைக்கல்லூரியில் 2002-ல் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி சுப்பிரமணியன் விசாரணை கமிஷன், 'இன்ஸ்பெக்டர் பாதமுத்து, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ், ரமணி, துணைக் கண்காணிப்பாளர் கணேசப்பெருமாள், அதிரடிப்படை போலீஸ்காரர்கள் ஐயப்பராஜ், இராமகிருஷ்ணன், அறிவழகன் ஆகியோர் தவறு செய்திருக்கிறார்கள்' என்று சொல்லியிருந்தது. இந்தக் குற்றச்சாட்டை கொள்கை அளவில் அரசு அப்போது ஏற்றுக்கொண்டது. ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது இன்று வரை தெரியவில்லை.
சென்னையில் 1999-ம் ஆண்டு நடந்த மத்திய சிறைக் கலவரத்தில் துணை ஜெயிலர் ஜெயக்குமார் உயிரோடு எரிக்கப்பட்டார். துப்பாக்கி சூட்டில் 11 கைதிகள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி டேவிட் கிறிஸ்டியான் விசாரணை கமிஷன், 'சிறைப்பணியாளர்களிடையே காணப்படும் ஊழலை உறுதியுடன் ஒடுக்கவேண்டும். கைதிகளுக்கு மறைமுக ஆதரவளிக்கும் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று பரிந்துரை செய்தது. ஆனால், இந்தப் பரிந்துரையை ஏற்று என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது அரசுக்கே வெளிச்சம்.
மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழி லாளர்கள் கூலிப் பிரச்னை தொடர்பாக புதிய தமிழகம் உட்பட பல கட்சிகள் சேர்ந்து நடத்திய ஊர்வலத்தில் மோதல் வெடித்து போலீஸ் தடியடி நடத்தியதில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 17 பேர் பலியானார்கள். இதுபற்றி விசாரிக்க 1999-ல் நீதிபதி மோகன் கமிஷன் போடப்பட்டது. பரிந்துரையில், 'அரசியல் கட்சி ஊர்வலங்களை தடை செய்யப் பொருத்தமான சட்டங்களை இயற்ற விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.' என்று நீதிபதி குறிப்பிட்டிருந்தார். இந்தப் பரிந்துரையும் ஏட்டோடு போய்விட்டது.
தென் மாவட்ட சாதி கலவரங்கள் தொடர்பாக அமைக்கப்பட்ட மோகன் கமிஷன், 'சாதித் தலைவர்கள் சிலைகளை அருங்காட்சியகத்தில் வைக்கவேண்டும்' என்று அரசுக்குப் பரிந்துரை கொடுத்தது. ஆனால், இதுவும் காற்றோடு போயாச்சு.
ஒரே சம்பவத்துக்கு 9 விசாரணை கமிஷன்கள்!
நேதாஜியின் மர்ம மரணம் குறித்து 1956-ல் நேரு பிரதமராக இருந்த போது ஷா நவாஸ் கமிஷனை அமைத்தார். விமான விபத்தில்தான் நேதாஜி இறந்தார் என்று சொன்னது இந்த கமிஷன். அடுத்து 1972-ல் ஜி.டி.கோஸ்லா கமிஷனை அமைத்தார் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி. 'நேதாஜி விமான விபத்தில்தான் இறந்தார்' என்று இதுவும் சொன்னது. அதன்பிறகு கொல்கத்தா உயர் நீதிமன்றம் அப்போது மத்தியில் இருந்த பி.ஜே.பி. அரசுக்கு உத்தரவிட்டதால் சுப்ரீம் கோர்ட், ஓய்வுபெற்ற நீதிபதி என்.சி.முகர்ஜியின் தலைமையில் கமிஷன் அமைத்தது. இது 2005 நவம்பர் 7-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், 'நேதாஜி விமான விபத்தில்தான் இறந்தார் என்று யாராலும் திட்டவட்டமாக சொல்ல முடியவில்லை. அதற்கு ஆதாரத்தையும் காட்டமுடியவில்லை' என்றது. மொத்தத்தில் நேதாஜி மரணம் குறித்து இன்னும் முற்றுமுடிவான பதில் இல்லை!
இந்திரா காந்தி1984-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட போது நடத்தப் பட்ட தாக்குதலில் 2733 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இதனை விசாரிக்க ஒன்பது விசாரணை கமிஷன்கள் அமைக்கப்பட்டன. அந்த கமிஷன்கள் என்ன விசாரணை நடத்தின என்பது குறித்தும் தெளிவான தகவல்கள் இல்லை.
15 ஆண்டுகளாக நீஈஈஈஈளும் கமிஷன்!
அயோத்தியில் 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக, நீதிபதி லிபரான் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் இதன் ஆயுளை நீட்டித்துக்கொண்டே போகிறது மத்திய அரசு. 15 ஆண்டுகளுக்கு மேல் இழுத்துக்கொண்டே போகும் இந்த கமிஷன் எப்போது முடிவுக்கு வரும் என்றே தெரியவில்லை.
என்ன ஆனது?
சில ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்க எம்.பி-க்கள் பணம் வாங்குவதாக ஒரு தனியார் டி.வி.சேனல் ஆதாரத்தோடு வீடியோவில் பதிவு செய்து அதனை வெளியிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை கமிஷன் போட்டார்கள். அது என்ன ஆனது என்றே தெரியவில்லை. வோல்கர் கமிட்டி ரிப்போர்ட்டை வைத்து நட்வர்சிங் கமிஷன் வாங்கியதாக எழுந்த புகாரை தொடந்து நியமிக்கப்பட்ட கமிஷன் என்ன ஆனது என்றே தெரியவில்லை!
நன்றி - ஜுனியர் விகடன் - எம்.பரக்கத் அலி
Friday, May 2, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment